என்மேல் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் எனவும், அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளேன் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அடங்கும்.

இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, அவரின் தந்தை ஆகியொரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது.

மேலும் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதிலும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது.

இதையடுத்து இதுகுறித்து ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதைதொடர்ந்து மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியிருந்த்து.

அதில், இன்று மாலை நேரில் ஆஜராகுமாறு குறிப்பிட்டிருந்தது. அதன்படி தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் நுங்கபாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலத்தில் ஆஜரானார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், என்மேல் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் எனவும், அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் வருவது இயல்பு எனவும் குறிப்பிட்டார்.