தமிழ்நாட்டில் நேற்று 639 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 536 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 11,760ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மே 4ம் தேதியிலிருந்து தினமும் சீரான வேகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. மே 13ம் தேதி வரை தினமும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியான நிலையில், மே 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களும் பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் குறைவாக இருந்தது. ஆனால் பெரியளவிலான வீழ்ச்சி இல்லை அது. கிட்டத்தட்ட 500 என்று சொல்லுமளவிற்கே இருந்தது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது ஆறுதலாக இருந்தது. 

ஆனால் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்த அந்த மூன்று நாட்களும், அதற்கு முந்தைய நாட்களில் செய்த பரிசோதனைகளை விட குறைவான பரிசோதனைகளே செய்யப்பட்டன. மே 7ம் தேதி 14,102 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 16ம் தேதி 8,720 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது. அதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதாக காட்டுவதற்காக பரிசோதனை எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துவிட்டதாகவும், கொரோனாவிலும் பொய்க்கணக்கு காட்டுவதாகவும் குற்றம்சாட்டிய ஸ்டாலின், இது பேராபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கையும் விடுத்தார்.

இதையடுத்து மேலும் நேற்று மற்றும் இன்று அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன் விளைவாக, நேற்று 639 பேருக்கும் இன்று 536 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் 61 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதுவரை வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே இதுதான் அதிகம். சென்னையில் மட்டுமே 85000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 
 
இன்று 11,121 பரிசோதனைகள் செய்யப்பட்டன. கடந்த 10 நாட்களில் சராசரியாக 12,536 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு  பரிசோதனையை எந்தவிதத்திலும் குறைக்கவேயில்லை. அந்த எண்ணமும் இல்லை. பரிசோதனை எண்ணிக்கையில் சற்று ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கலாமே தவிர, பரிசோதனை குறைக்கப்படவில்லை. எனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளிலும் தகவலிலும் உண்மையில்லை என்று ஸ்டாலின் பெயரை சொல்லாமல், ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.