விஜய்யின் அப்பாதான் விஜய்யைக் கெடுக்கிறார் என்று ஆன்லைனில் வந்து வந்து, அது விஜய்யின் தலையில் ஏறிக்கொண்டது என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர் "அப்பா - மகன் என்பதில் எந்தவிதமான விரிசலும் இல்லை. பொதுக் கருத்துகள் என்று வரும்போது விஜய் அவருடைய கருத்திலும், நான் என்னுடைய கருத்திலும் நிற்கிறோம். இருவருமே விட்டுக்கொடுக்க மாட்டோம். இதில் பிரச்சினைகள் வரத்தானே செய்யும். தற்போது விஜய் விட்டுள்ள அறிக்கையை ஏற்கெனவே கொடுக்கச் சொல்லி அவரிடம் 10 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருந்தேன்.

எனக்கு அரசியலில் ஆர்வமுள்ளது. தனியாகக் கட்சி தொடங்கலாம் என்று இருக்கிறேன். உன்னிடம் கேட்டால், 'எனக்கும் அந்தக் கட்சிக்கும் சம்பந்தமில்லை. அவர் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறார்' என்று சொல்லிவிடு என நானேதான் விஜய்யிடம் கூறினேன். ஆகையால், விஜய் கொடுத்த அறிக்கையால் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. சில வார்த்தைகளைக் கடினமாக உபயோகப்படுத்தியுள்ளார்.

விஜய்க்காக நான் என்னென்ன செய்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். இந்தத் திரையுலகிற்குத் தெரியும். விஜய்யைச் சிக்க வைப்பதற்கான வேலையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து உண்மையான விசுவாசிகள் எல்லாம் வெளியே சென்றுவிட்டார்கள். பொய்யானவர்கள் எல்லாம் உள்ளே வருகிறார்கள். இது விஜய்க்குத் தெரியவில்லை.

விஜய்யின் அப்பாதான் விஜய்யைக் கெடுக்கிறார் என்று ஆன்லைனில் வந்து வந்து, அது விஜய்யின் தலையில் ஏறிக்கொண்டது. 'துப்பாக்கி' படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படங்களின் கதைகள், தயாரிப்பாளர் என எதிலுமே தலையிடுவதில்லை. இருவரும் நேரில் சந்திக்கும்போதுகூட "எப்படிப்பா இருக்க, நல்லா இருக்கியா" என அளவாகத்தான் பேசுவேன். அரசியல் பற்றியெல்லாம் பேசுவதில்லை.

இன்னும் சொன்னால் விஜய்யை அரசியலுக்கு வராதே என்று சொன்னேன். 'நீ நல்ல உயரத்தில் இருக்கிறாய். இன்னும் கொஞ்ச நாளுக்கு சந்தோஷமாக இரு. சினிமாவில் இன்னும் உயரம் இருக்கிறது. தயவுசெய்து இப்போது அரசியலுக்கு வராதே. ஆனால், நான் வருகிறேன். என்னைக் கட்டுப்படுத்தாதே' என்று சொன்னேன். விஜய் என் பிள்ளை. அவர் என் மீது நடவடிக்கை எல்லாம் எடுக்கமாட்டார்.

விஜய்க்காக நான் உழைத்த உழைப்பு, பட்டபாடு எல்லாமே அவருக்குத் தெரியும். அப்படிப்பட்ட அப்பாவை எதிர்த்து இப்படியான வார்த்தைகள் வராது. முழுக்கவே அந்த அறிக்கை விஜய் எழுதிய அறிக்கை அல்ல. விஜய்க்குத் தனி உரிமை கொடுத்து தனியாக வந்தேன். அந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய தீய சக்திகள் அவரைச் சுற்றிக் கொண்டன. மறுபடியும் நான் உள்ளே சென்றால் தீய சக்திகளின் வாழ்க்கை போய்விடும். எங்களை எந்த அளவுக்குப் பிரிக்க வேண்டுமோ, அதில் குறியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆனந்த் என்பவரைப் பொறுப்பாளராக நியமித்தேன். தற்போது 37 மாவட்டங்களுக்கு 200 பேர் மாவட்டத் தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் இயக்கத்துக்கும் சம்பந்தமில்லை. அவர்களுக்கும் ஆனந்துக்கும்தான் சம்பந்தம். ஆனந்த், சரவணன், பிரசாந்த் இவர்கள் மூவரையும் மீறி ஆன்லைனில் விஜய்யைப் பற்றி ஒரு செய்தி வராது. பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை விஜய் நம்பிக் கொண்டிருக்கிறார். ஆன்லைன் அரசியல்தான் சமீபமாக நடந்து கொண்டிருக்கிறது. இது விஜய்க்குத் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால், அவர் ஒரு இரும்புக் கோட்டைக்குள் இருக்கிறார். ட்விட்டரில் வருவதை மட்டுமே உண்மை என நினைக்கிறார்" என அவர் கூறியுள்ளார்.