கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருடன் மேலும் 3 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்த 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும், எதிர்க்கட்சி மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிகளை சித்தராமையாவும் ராஜினாமா செய்தார்கள்.

 தற்போது கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் மட்டுமில்லாமல் இந்தியாவில் இருக்கும் பணக்கார அரசியல்வாதிகளில் சிவகுமாரும் ஒருவர். கடந்த லோக்சபா தேர்தலில் இவர் தன்னிடம் 840 கோடி ரூபாய் மொத்தமாக சொத்தாக இருப்பதாக தெரிவித்து இருந்தார். 

எப்போதும் ஹெலிகாப்டரில் பயணிக்கும் இவர், செய்தியாளர்களை சந்திக்க கூட ஹெலிகாப்டரில் வந்த கதை எல்லாம் நடந்து இருக்கிறது. ஒக்கலிக சமூகத்தைமிகவும் வலிமையான மனிதர் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகி இருக்கிறார். கர்நாடக அரசியலில் எடியூரப்பாவின் பாஜக அரசு அமைச்சரவை விரிவாக்கம் காரணமாக கடுமையாக திணறி வருகிறது.

 

இந்த நிலையில் சிவக்குமார் வருகை பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அத்துடன், செயல் தலைவர்களாக 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈஷ்வர் காண்ட்ரே, சதீஷ் ஜர்கிஹோலி, சலீம் அகமது ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல், டெல்லி முன்னாள் எம்.எல்.ஏ அனில் சவுத்ரி காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.