ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். 9 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதன் முறையாக 1977-ல் சத்தியமங்கலத்தில் இருந்தும், பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையத்தில் இருந்தும் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதிமுகவில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்திருந்த போது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வென்றவர்.

 வனத்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், விவசாயத் துறை அமைச்சர்,  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், அதையடுத்து வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.  2017 ஆண்டு எடப்பாடி க. பழனிசாமி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆனாலும் உட்கட்சி அரசியல் தொடர்பாக அவர் எந்த அணியிலும் இல்லை. தனித்து செயல்பட்டு வருகிறார். கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டபோதெ முதல்வராக வேண்டும் என நினைத்தார். அப்போது அது சில காரணங்களால் கைநழுவிப்போனது. ”கூவத்தூரில் துணிச்சலாகக் காய்களை நகர்த்தியிருந்தால் உறுதியாக முதல்வர் ஆகியிருப்பார். அவர் அவ்வாறு செய்யாததால் முதல்வராக முடியவில்லை.” ஆனால் இப்போதும் சசிகலா குடும்பங்களுடன் அவருக்கு நட்பு இருப்பதாக கூறப்படுகிறது. டி.டி.வி குரூப் ஆட்கள், திவாகரன் குடும்பம், இளவரசி குடும்பம் என அனைவருடனும் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்.  சிறையிலிருந்து சசிகலா வெளியில் வந்துவிட்டால், தன்னை முதல்வர் ஆக்குவார் என நம்பிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனை ஸ்மெல் செய்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கூல் செய்யும் விதமாக, அடுத்து தனது சாதிக்காரருக்கு முக்கிய பதவி வாங்கித் தருவதை பறைசாற்றும் விதமாக, அதே நேரத்தில் சசிகலா பக்கம் போய் விடக்கூடாது என்பதற்காக, மத்திய ஆளும் பாஜக தலைமையிடம் பேசி செங்கோட்டையனுக்கு ஆளுநர் பதவி பெற்றுத்தர முயற்சி எடுத்துள்ளதாக கூறபடுகிறது. அதற்கு பாஜக மத்திய அரசும் க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக தகவல். சட்டமன்றத் தேர்தலில் அந்த அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிடவில்லை என்றால் அவர் கவர்னர் ஆவது நிச்சயம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.