மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வாங்கி சென்றுள்ள ஓ.பி.எஸின் வாரிசுக்கு எதிராக ஓ.பிஎஸின் ஆதரவாளர் ஒருவரின் வாரிசும் வரிந்து கட்டி களமிறங்க தயாராகி வருவதால் பெரும் போட்டி நிலவி வருகிறது. 

3 முதல்வர்களை தமிழகத்துக்கு கொடுத்த மாவட்டம் தேனி. இப்போது வாரிசு அரசியல் போட்டி தலை தூக்கி வருகிறது.  ஓ.பன்னீர்செல்வம் தொகுதி பக்கமே செல்லாததால் அவர் மீது அதிமுக தொண்டர்களும் மக்களும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தியை களைய தனது மகன் ரவீந்திர நாத்தை களத்தில் இறக்கி விட்டு களப்பணியாற்ற வைத்தார் ஓ.பன்னீர்செல்வம். 

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவியது. இந்தத் தொகுதியை குறி வைத்து கிளம்பி இருக்கிறார் ரவீந்திர நாத். இதற்காக அதிமுக விநியோகித்த விருப்ப மனுவையும் பெற்று சென்றுள்ளார். இந்த முறை தேனி தொகுதியில் தனது மகனை களமிறக்கி டெல்லி அரசியலை கவனிக்க அனுப்பியே ஆக வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

இங்கு தான் எடப்பாடி ஆதரவாளரான எம்.எல்.ஏ எஸ்.டி.கே.ஜக்கையனும் தனது வாரிசை களமிறக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். இவரது மகன் தேனி மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்து வருகிறார். இவரும் விருப்ப மனுவை பெற்று விட்டு சென்றிருக்கிறார். தேர்தலில் கட்சியினருக்கு செலவு செய்ய இவர்களை விட்டால் வேறு ஆளில்லை. சமுதாயரீதியாகவும் ஓட்டு வாங்கி வெற்றிபெறுவார் என எடப்பாடியிடம் நச்சரித்து வருகிறார் ஜக்கையன். இதனால் சீட்டு ஓ.பன்னீர்செல்வம் வாரிசுக்கா? அல்லது எடப்பாடியின் ஆதரவாளர் எஸ்.டி.கே. ஜக்கையனின் வாரிசுக்கா? என அதிமுகவில் விவாதமே நடந்து வருகிறது.