நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவை என்னிடம் தெரிவித்தார். ஆனாலும், அவர் நேரடி அரசியலில் இல்லாவிட்டாலும் 1996-ம் ஆண்டைப் போல் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புவதாக குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் ரஜினி மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி. ரஜினியுடன் நல்ல நட்பு கொண்டிருந்த அவர், சமீபத்தில் அமித் ஷா சென்னை வந்தபோது அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ரஜினியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் ரஜினி கட்சி தொடங்குவேன் என அறிவித்தார். இதனை குருமூர்த்தி வரவேற்றார். இன்று திடீரென அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து ரஜினி பின்வாங்கிவிட்டார். அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அதிகாரபூர்வமாக ரஜினி அறிவித்தார். இந்நிலையில் குருமூர்த்தி இதுகுறித்து ட்விட்டரில் கருத்துப் பகிர்ந்துள்ளார்.

ரஜினி நேரடி அரசியலில் இல்லாவிட்டாலும் 1996-ம் ஆண்டைப் போல் வாய்ஸ் கொடுப்பார் என்று எண்ணுவதாக குருமூர்த்தி பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அந்தப்பதிவில், ‘’“ரஜினிகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவால், தனது முடிவைப் பற்றி என்னிடம் கூறினார். அது தவிர்க்க முடியாதது. ஆனால், அரசியலில் நேரடியாக இல்லாமல் தமிழக மக்களுக்குச் சேவை செய்வேன் என்று அவர் கடைசி பாராவில் கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். எனது கணிப்பு அவர் 1996-ம் ஆண்டைப் போல தமிழக அரசியலில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.