நடிகர் வடிவேலுவுடன் தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவரை ஒப்பிட்டு பேசியிருக்கிறார் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ. அவர் யாரை அப்படிச் சொல்கிறார்? 

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

 “கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் தி.மு.க.வினர் கிளை செயலாளர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். திமுக கூட்டணியில்  நடிகர் வடிவேலு நகைச்சுவை செய்தது போல ‘நானும் ரவுடிதான்..’ என்பது போல வைகோ உள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த வைகோ, அன்றைக்கு மோடியை நடமாடும் காந்தி என்று கூறினார். அவவரைப்போன்று மற்றொரு அவதாரம் யாரும் எடுக்க முடியாது என்றெல்லாம் வைகோ கூறினார். இன்றைக்கு மோடி சாதனை நாயகனாக உள்ளார். 1998-ஆம் ஆண்டில் பா.ஜக. தான் ஆட்சிக்கும் வரும், வாஜ்பாய்தான் பிரதமர் என்று ஜெயலலிதா கூட்டணி அமைத்து தமிழகத்திலும் தாமரையை மலரச்செய்தார். வைகோவின் கட்சி சின்னமான பம்பரத்தை சுழல செய்தவர் ஜெயலலிதாதான்.

பாகிஸ்தானை அடித்து நொறுக்க ஆரம்பித்தவுடன் மக்களிடம் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை ஒழித்து காட்டிய சர்வ வல்லமை ஆட்சி பா.ஜ.க. ஆட்சி. கார்கில் எப்படி வரலாற்று வெற்றியை வாஜ்பாய்க்கு பெற்று தந்ததோ, அதேபோல மோடி அலைதான் இந்தியா முழுவதும் வீசபோகிறது. மோடிதான் பிரதமர் என்று தேர்தலை சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. ஆனால் தி.மு.க. யார் பிரதமர் என்று சொல்லி தேர்தலை சந்திக்கும்? இவ்வாறு கடம்பூர் ராஜூ பேசினார்.