பாஜகவிற்கு தனிக்கொள்கை இருந்தாலும் அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை பெரும் பூதாகரமாக வெடித்தது. பிறகு ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினரை அமைச்சர்கள் ஆளுக்கொரு பக்கம் சந்தித்து பேசி, அவர்களை சமாதானம் செய்து, இறுதியில் அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. இதையடுத்து எடப்பாடியார் தான் முதல்வர் வேட்பாளர் என உறுதியானது. ஆனால், முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் தொடர்ந்து கூறிவந்தார். இவருக்கு அதிமுக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வந்தது. எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் தான் வைப்போம் என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எங்களின் கட்சித் தலைமைதான் அறிவிக்கும். அதேநேரத்தில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான பழனிசாமியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக பழனிசாமி தற்போது உள்ளார்.

மேலும், பாஜகவிற்கு தனிக்கொள்கை இருந்தாலும் அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருக்கிறது. திமுகவுக்கும் காங்கிரசுக்கும் தனித்தனி கொள்கை இருப்பது போல அதிமுக பாஜக இடையே தனித்தனிகொள்கை உள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துக்கூறி வருகிறோம். இதன் மூலம் திமுகவின் போலி முகத்திரை அகற்றப்பட்டு வருகிறது என விமர்சித்துள்ளார்.