Leader of the opposition continued to demand to cancel the vote of confidence in the case of Stalin Chief Minister Chief Secretary the High Court issued a notice to the secretary of assembly
நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதலமைச்சர், தலைமை செயலாளர், சட்டபேரவை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பை,ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.
இல்லாவிட்டால் ஒருவார காலத்திற்கு சபையை ஒத்தி வைத்து எம்.எல்.ஏக்களை சொந்த தொகுதிக்கு அனுப்பி பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்று திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.

இதை சபாநாயகர் தனபால் ஏற்காததால், சட்டசபையில் அமளி ஏற்பட்டது. சபாநயகர் மேசை உடைக்கப்பட்டது. மைக்கும் உடைக்கப்பட்டது. சபாநயகரை சுற்றி நின்று திமுக எம்.எல்.ஏக்கள் கேரோ செய்தனர். சபாநாயகரை கையை பிடித்து இழுத்து வெளியேற விடாமல் தடுத்தனர்.
இதன் பின்னர் சட்டசபையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். அதன் பின்னரும் அமளி நீடித்ததால் திமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார். பின்னர் நடந்த வாக்கெடுப்பில் பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
சட்டசபையில் மார்ஷல் உடையில் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் உள்ளே நுழைந்து தங்களை தாக்கியதாக திமுகவினர் தெரிவித்தனர்.

தன்னுடைய சட்டை கிழிக்கப்பட்டதை கவர்னரிடம் நேரடியாக காண்பித்த ஸ்டாலின் புகார் அளித்தார். பின்னர் கடற்கரையில் அறப்போராட்டம் நடத்தி கைதானார்.
இதையடுத்து சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு மீதான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பேரவை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் மார்ச் 10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிரபித்துள்ளனர்.
சட்டப்பேரவையின் அவைக்குறிப்புகளை மொழிப்பெயர்த்து தாக்கல் செய்யவும் உத்தரவு பிரபிக்கபட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடுத்த வீடியோ ஆதாரங்களையும் சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
