அரியானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தொடக்கம் முதலே பாஜகவுக்கு இணையாக காங்கிரஸ் இடங்களை பிடித்தது. இதனால், யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதில் இழுபறி நீடித்தது. 90 சட்டப்பேரவை இடங்களை கொண்ட அரியானாவில் ஆட்சி அமைக்க 46 எம்.எல்.ஏக்கள் தேவை. ஆனால், பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல், காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியது. மேலும், ஜேஜேபி 10 இடங்களிலும்,  சுயேட்சைகள் 7 இடங்களிலும் வென்றுள்ளனர். 

எந்தவொரு கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாததால் எந்தக் கட்சியும் இதுவரை அரசு அமைக்க உரிமை கோரவில்லை. சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர்.  

40 இடங்களில் வென்ற பாஜகவுக்கு 6 இடங்கள் மட்டுமே ஆட்சி அமைக்க தேவை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் கூடுதலாக தேவை. 10 இடங்களை பிடித்த ஜனநாயக ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தக் கட்சி முதல்வர் பதவியே கேட்டுள்ளதால் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டியுள்ளது. சுயேச்சைகள் 8 பேரும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இன்று மாலை ஆளுரை சந்தித்து ஆட்சியமைக்க மனோகர் லால் கட்டார் உரிமை கோர உள்ளார்.