தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீமுக்குஎதிரான பலாத்கார வழக்கில் தீர்ப்புக்குப் பின் கலவரம் வரும் என அறிந்தும் அதை தடுக்க அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் முயற்சி எடுக்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து மத்திய உளவுத்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அரியானாவில்  கலவரம் வெடித்ததில் 32 பேர் பலியானார்கள். இரு ஐபிஎஸ்அதிகாரிகள் மற்றும் 60 பாதுகாப்பு படையினர் உட்பட 360 பேர் காயம் அடைந்துள்ளனர்.இதனால் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று அமைதி திரும்பியது. இதைத் தொட்ந்து,  நேற்று அமலாக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, 144 தடை உத்தரவு மட்டும் பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் தம் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

அரியானாவின் பஞ்ச்குலா, சிர்சா மற்றும் பண்டிண்டாவில்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு, பாஜக முதலமைச்சரான மனோகர் லால் கட்டார் அரசே முழுக்காரணம் என பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். கல்வியறிவு அதிகம் உள்ளவர்கள் வாழும் நகரம் எனப்பெயர் எடுத்த பஞ்ச்குலாவில் இதுபோன்ற கலவரம் ஏற்பட்டதில்லை எனக் கருதப்படுகிறது.இது குறித்து  மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ மூன்று நாட்களுக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடும்படி அரியானா அரசிற்கு எச்சரிக்கை விடுத்தோம். சாமியார் குர்மீத் சிங் வழக்கில் தீர்ப்பு கூறப்படும் போது, கூட்டம் சேர அனுமதிக்காதீர்கள் என கூறியதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.  கலவரச்சூழலை அறிந்தும் ஹரியாணா அரசு தடுக்காமல் இருந்தது தான் உயிர் பலிகளுக்கு காரணம் ’’ எனத் தெரிவித்தனர்.

முரண்பட்ட அறிக்கை

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானாவில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக நேற்று முன் தினம் ஊடகத்தினர் சந்திப்பில்  கூறி, முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசை காப்பாற்றுமாறு கூறினார். ஆனால், உள்துறை செயலாளரான ராஜீவ் மெஹரிஷியின் கருத்து வேறாக இருந்தது. நிருபர்களிடம் பேசிய மெஹரிஷ், அரியானாவில் பதட்டநிலை தொடர்ந்து நீடிப்பதாகத் தெரிவித்திருந்தார்.