எம்.பி. சசிகலா புஷ்பாவின் வலது கரமாக இருந்த நெல்லை நாடார் மக்கள் சக்தி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக தலைமைக்கு எதிராக புகார் கூறிய சசிகலா புஷ்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிமுக தலைமை அதிரடியாக நீக்கியது. இதனை அடுத்து எம்.பி. சசிகலா எம்.பி. மீது பல்வேறு புகார்கள் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டன.

சசிகலாவின் வீட்டில் வேலை பார்த்த பானுமதி, ஜான்சி ஆகியோர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் அளித்தனர்.
இளம் பெண்கள் பானுமதி, ஜான்சிராணி சார்பில் வழக்கறிஞர் சுகந்தி ஜேசன் ஆஜராகி வருகிறார். வழக்கறிஞர் சுகந்தி ஜேசன் வீடு, சில மர்ம நபர்களால் தாக்குதலுக்கு ஆளானது.

இந்த நிலையில், எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக கூறப்படுபவர் ஹரி நாடார். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள யானைக்குடியை சேர்ந்தவ இவர், நாடார் மக்கள் சக்தி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.
சசிகலா புஷ்பாவுக்கு எதிராக புகார் கூறிய இளம் பெண்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் சுகந்தி ஜேசன் வீடு தாக்கப்பட்டதில் ஹரி நாடார் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹரி நாடாரை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் வலது கரமாக இருந்த ஹரி நாடார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
