* விஜயகாந்தை சந்தித்து அரசியல் நிலவரம் பேசினேன். அவருடைய கருத்தை கேட்டேன், என்னுடைய கருத்தையும் அவரிடம் சொன்னேன். ஆனால் விஜயகாந்த்தான் முடிவு எடுக்க வேண்டும். கூட்டணி என்பது அவருடைய கட்சி நிர்வாகிகள் என்ன சொல்கிறார்களோ அதன் அடிப்படையில்தான் எடுக்கப்படும். அதில் நான் தலையிட முடியாது: சரத்குமார். (அண்ணாச்சி நில்லுங்க, நில்லுங்க நீங்க பாட்டுக்கு பேசிட்டே போறீயளே. நம்மவரோட பிரஸ் மீட்ட அடிக்கடி பார்க்காதீயன்னா கேக்குறீங்களா. இப்ப பாருங்க எங்களுக்கும் புரியாம, உங்களுக்கும் புரியாம, ஏன் நம்ம விஜயகாந்துக்கே புரியாத மாதிரி பேசுறீங்க.)

* சபாநாயகரின் கையை வெட்டுவோம் என சொன்ன ரத்தினசபாபதியே! தனபால் இந்த இயக்கத்தின் மானம் காத்த வீரர். நீ மிரட்டினால் உன் மிரட்டலுக்கு நாங்கள் பயந்துவிடுவோமா? அப்படி எத்தனை கையை வெட்டுவ? உன் கையை வெட்ட எவ்வளவு நேரமாகும்?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. (டியர் அமைச்சர், எங்களுக்கு என்னமோ பாலகோட் பக்கத்துல பாய் விரிச்சு உட்கார்ந்திருக்கிற மாதிரியே இருக்குது. அம்மா இருக்குற வரைக்கும் விசு படத்து அப்பாக்கள் மாதிரி இருந்தீங்க, மகராசி போன பிறகு இப்படி ஹரி படத்து வில்லனா மாறீட்டீங்களே அமீச்சர்ஸ் ஆளாளுக்கு)

* நான்  தீவிரவாதத்தை ஒழிக்க நினைக்கும் போது, என்னை ஒழிக்க எதிர்க்கட்சிகள் சதி திட்டம் போடுகின்றன: நரேந்திர மோடி. (அட்ரா! அச்சரா! என்னா டயலாக்குடா இதெல்லாம், கண்மணி, மகாராணி, லட்சுமி ஸ்டோர்ஸுன்னு எங்க ஊரு சீரியல்ல கூட ஒரு பயபுள்ளையும் இப்படி கண்ணீரு கன்னாபின்னான்னு வர்ற மாதிரி செண்டிமெண்டு டயலாக்குகளை எழுதி தட்டுறதில்லை. நமோ உங்க லெவலே வேற!)

* கூட்டணிக்காக பி.ஜே.பி. எங்க கழுத்தை நெரித்ததாக முத்தரசன் சொல்லியிருக்கிறார். எங்க கழுத்தை யாராலும் நெரிக்க முடியாது நாங்க யானை பலம்  உள்ளவர்கள். தூக்கி அடிச்சுடுவோம்: அமைச்சர்  ஜெயக்குமார். (க்கும், கேப்டன் கூட இன்னமும் கூட்டணி அதிகாரப்பூர்வமா முடிவாகலை. அதுக்குள்ளே அவரோட ஸ்டைலு அண்ணனை பத்திக்கிச்சு. கேப்டன் கூட ரெண்டு பிரசாரம் போனாக்க அம்புட்டுதேன், பின்னங்காலை துக்கி செவுத்துல தவ்வி, வானத்துல பறந்து அமைச்சர் அடிக்கப்போற ஹைவோல்டேஜ் ஆக்‌ஷன் பிளாக்குகளை நினைச்சா அடிவயிறுல யாரோ ஆட்டோரிக்‌ஷா ஓட்டுறா மாதிரி இருக்குது.)

* அ.தி.மு.க -பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணி என்பது மெகா கூட்டணி அல்ல, அது மானங்கெட்ட கூட்டணி. ஆனால் நாங்களோ மரியாதை பொங்கும் மக்களோடு கூட்டணி அமைத்துள்ளோம்: டி.டி.வி.தினகரன். (கொழாயடியில ரெண்டு குடம் தண்ணிக்கு சண்ட போடும்  பொம்பளைங்க கூட கொஞ்சம் நாகரீகம் பார்த்து பேசுவாங்க. ஆன மாஜி எம்.பி.க்கள், சிட்டிங் அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள்ன்னு நீங்களெல்லாம் பேசுற பேச்சை கேட்டு மக்கள்தான் தும்பை செடியில தூக்கு போட்டுக்கணும் போல.)