மூன்றாவது அணி அமையாமல் தடுக்க திமுக கடுமையாக முயற்சித்து வரும் நிலையில் அப்படி ஒரு நிலையை உருவாக்க காங்கிரஸ் முயன்று வருவது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. தமிழகம் புதுச்சேரியில் போட்டியிட்ட 40 தொகுதிகளில் 39ஐ இந்த கூட்டணி கைப்பற்றியது. இதே கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்தது போன்று சட்டமன்ற தேர்தலில் தொகுதிகளை அள்ளிக் கொடுக்க திமுக தயாராக இல்லை என்கிறார்கள். அதிகபட்சமாக 21 தொகுதிகள் தான் காங்கிரசுக்கு என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இது குறித்த தகவலும் காங்கிரசிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.

காங்கிரசை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக கூட்டணி அல்லது அதிமுக கூட்டணி எனும் இரண்டு வாய்ப்பை மட்டுமே பரிசீலிக்கும் என்று திமுக நம்புகிறது. ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கூட அதிமுகவுடன் கூட்டணி சேரவே முயற்சிகள் நடைபெறும் என்று திமுக கருதுகிறது. இதனால் தேர்தலில் திமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று திமுக கணக்கு போடுகிறது. அதாவது தேர்தல் சமயத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறும் நிலையில் காங்கிரசும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இப்படி அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றால் தேர்தலில் அது திமுகவிற்கு சாதகமாகவே இருக்கும் என்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நினைக்கிறார்கள். இதனால் தான் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். ஏனென்றால் கடந்த முறை காங்கிரசுக்கு கொடுத்த தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் அந்த கட்சி படு தோல்வி அடைந்தது. இதனால் தான் கடந்த முறை ஜெயலலிதா சிறிய பெரும்பான்மையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடிந்தது.

அதே போன்ற ஒரு சூழல் தற்போது நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே காங்கிரசுக்கு தொகுதிகளை குறைக்க திமுக முடிவு எடுத்துள்ளது. ஆனால் இதனை காங்கிரஸ் ஏற்க தயாராக இல்லை. கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட ஒரு தொகுதியாவது தங்களுக்கு கூடுதலாக வேண்டும் என்று காங்கிரஸ் கருதுகிறது. அப்படி தங்களுக்கு கடந்த முறை கொடுத்த தொகுதிகளை கொடுக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து பயன் இல்லை என்றும் அந்த கட்சி முடிவெடுத்துள்ளது.

மேலும் திமுக கூட்டணியில் உரிய மரியாதை இல்லை என்றால் அதிமுக கூட்டணி. அதுவும் இல்லை என்றால் மூன்றாவது அணி என்பதில் காங்கிரஸ் தீர்க்கமாக உள்ளதாக சொல்கிறார்கள். இதனை மனதில் கொண்டே தான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து கூறியதாக கூறுகிறார்கள். ஏனென்றால் கமல் – காங்கிரஸ் கட்சியுடன் மிகவும் இணக்கமாக உள்ளார். மூன்றாவது அணிக்கான முயற்சியிலும் அவர் இருக்கிறார். எனவே திமுக இல்லை என்றால் கமல் உதவுவார் என்று காங்கிரஸ் கணக்கு போடுகிறது.

இதே போல் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் திடீரென எதிர் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஏழு பேரையும் கொலைக்குற்றவாளிகள் என்று கூறியுள்ள காங்கிரஸ் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் முயற்சிப்பது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளது. அதாவது ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு சரியில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

இப்படி திடீரென திமுகவிற்கு எதிரான அரசிய்ல நிலைப்பாட்டை வெளிப்படையாக காங்கிரஸ் எடுத்துள்ளதற்கு காரணம் கூட்டணி பிரச்சனை தான் என்கிறார்கள். எதிர்பார்க்கும் மரியாதை கிடைக்கவில்லை என்றால் திமுகவிற்கு எதிராக அரசியல் செய்யவும் தயங்கமாட்டோம் என்பதைத்தான் கே.எஸ்.அழகிரி சொல்லாமல் சொல்லியுள்ளர் என்கிறார்கள்.