சிவகங்கை தொகுதியை ஹெச்.ராஜாவுக்காக அதிமுக கூட்டணியில் பாஜக கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதேவேளை திமுக கூட்டணியில் அந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் குடும்பத்தில் இருந்து ஒருவர் போட்டியிட உள்ளதால் டி.டி.வி.தினகரன் அணி வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

சிவகங்கை மக்களவை தொகுதியில் கடந்த 2014 தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில்நாதன் வெற்றி பெற்று எம்.பி ஆனார். இரண்டாவது இடத்தை திமுகவும், மூன்றாவது இடத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹெச்.ராஜாவுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 763 வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ப.சிதம்பரம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 678 வாக்குகளை பெற்றார். இந்நிலையில் தற்போது திமுக கூட்டணி பலத்தோடு காங்கிரஸும், அதிமுக பலத்துடன் ஹெச்.ராஜாவும் களமிறங்க முடிவு செய்துள்ளனர்.

 

ஆனால், அதிமுக சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற செந்தில்நாதன் இம்முறையும் களமிறங்கத் தயாராகி வருகிறார். அவர் மீது எந்தவித சர்ச்சைகளும் இல்லதாதால் பாஜகவுக்கு தொகுதியை விட்டுக் கொடுக்கக் கூடாது என அதிமுகவினர் தலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஹெச்.ராஜா, உள்ளூரில் ஏகப்பட்ட வாய்க்கால் வரப்பு பஞ்சாயத்துகளை கூட்டி வைத்துள்ளார். சிவகங்கை தொகுதியில் பலரும் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஹெச்.ராஜா பிராமண சமூகத்தை சேர்ந்தவர். ப.சிதம்பரம் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர். சிவகங்கை தொகுதியை பொறுத்தவரை பிற சமுதாயத்தினரின் 40 சதவிகித வாக்குகளை மட்டுமே அதிகபட்சமாக அவர்கள் பிரித்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மீதமுள்ள 60 சதவிகித வாக்குகள் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தது என்பதால் அப்படியே அமமுக வேட்பாளர்களுக்குச் சென்று விடும். 

ஆக, ஹெச்.ராஜாவை சிவகங்கையில் களமிறக்கினால் அதிமுக கூட்டணி சிவகங்கை தொகுதியை கோட்டை விடுவது உறுதி என்கிறார்கள் அதிமுக உள்ளூர் நிர்வாகிகள். ஆகையால் அதிமுக சார்பாக வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்கிறார்கள்.   

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அமமுக பேரவை மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி களமிறக்கப்பட உள்ளார். இவர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். கட்சிதமாக களப்பணியாற்றக் கூடியவர். வாக்காளர்களை கவரக்கூடிய கனிவான பேச்சும் இவருக்கு கூடுதல் பலம். அத்தோடு இதுவரை அதிமுகவுக்கு ‘மானம் காக்கும் மானாமதுரை’ எனக் கூறப்பட்டு வந்த மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் மாரியப்பன் கென்னடி அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவர் டிடிவி.தினகரன் அணிக்குச் சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது இந்த இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிவாகை சூட வேண்டும் என களத்தில் இறங்கியுள்ளார். இத்தொகுதியைச் சேர்ந்த இளையான்குடியில் சிறுபான்மையினர் அதிகமாக வசிப்பதால் பாஜகவுக்கு சிவகங்கை தொகுதியை ஒதுக்கினால் அதிமுக கூட்டணி நிச்சயம் சிவகங்கை தொகுதியை இழப்பதோடு மட்டுமல்லாது மானாமதுரை சட்டமன்றத் தொகுதியையும் இழக்கும் அபாயம் உள்ளதாக அதிமுகவினர் கருதுகின்றனர்.

 

சிவகங்கை தொகுதியில் ஹெச்.ராஜா களமிறக்கப்பட்டால் டி.டி.வி. தினகரன் அணி எளிதாக சிவகங்கை தொகுதியையும் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியையும் கைப்பற்றும். ஆகையால் இந்த தொகுதியை வெல்ல எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காத முக்குலத்தோர் வகுப்பை சேர்ந்த சிட்டிங் எம்.பியான பி.ஆர்.செந்தில்நாதனையே அதிமுக வேட்பாளராக நிறுத்த வேண்டும். அவரை களமிறக்கினால் மட்டுமே முக்குலத்தோர் வாக்குகளை பெற முடியும் என தலைமைக்கு சிவகங்கை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிவகங்கை மட்டுமல்ல. ஹெச்.ராஜாவுக்கு வேறு எந்தத் தொகுதியில் வாய்ப்பு கொடுத்தாலும் அங்கு தோல்வி நிச்சயம் என்கிறார்கள் கூட்டணிக் கட்சியினர். 

திமுக இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. காரணம் எப்போதும் சிவகங்கை தொகுதியை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி விடும்.