கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஆலையை சீல் வைத்து மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூன்று பேர் குழு அமைக்கப்பட்டது. 25 நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என ஆய்வுக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆலையைத் திறக்கத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஆலையை திறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகமும், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜனவரி 8) நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன், நீதிபதி நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. அப்போது, ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த உத்தரவுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை விதித்து உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவையும் நிறுத்தி வைத்துள்ளது.

“தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம். நிலத்தடி நீரை மாசுபடுத்தக் கூடாது” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், தற்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.