புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலை தகர்க்கபட்ட விஷயத்தில் சம்பந்தபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளரும் சிவகங்கை தொகுதி வேட்பாளருமான ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் அரசு மருத்துவமனை அருகே பெரியார் சிலை உள்ளது. இந்தச் சிலையின் தலையை நேற்று சமூக விரோதிகள் தகர்த்தனர். தேர்தல் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரி வருகின்றன.

திக மற்றும்திமுக கூட்டணி கட்சிகள் இந்தச் சிலை தகர்ப்பின் பின்னணியில் இந்துத்துவா கைகள் இருப்பதாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் சிலை உடைக்கபட்ட சம்பவம் குறித்து ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, இந்தச் சம்பவத்தைக் கண்டித்தார்.
“பெரியார் சிலை உடைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை உடனடியாக போலீஸார் முறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

