தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதை பாஜக மேல்மட்ட நிர்வாகிகள் மட்டும் அல்ல தொண்டர்களும் கூட விரும்பவில்லை என்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் அதிமுக அரசுக்கு எதிரான ஹெச்.ராஜாவின் பகீர் ட்வீட் என்றும் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதை பாஜக மேல்மட்ட நிர்வாகிகள் மட்டும் அல்ல தொண்டர்களும் கூட விரும்பவில்லை என்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் அதிமுக அரசுக்கு எதிரான ஹெச்.ராஜாவின் பகீர் ட்வீட் என்றும் கூறுகிறார்கள்.

பொதுவாக அரசியலில் கூட்டணி என்று வந்துவிட்டார் அதில் கொள்கைக்கு இடம் கிடையாது. ஆனால் கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளிடையே கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆக வேண்டும். உதாரணமாக அரசியல் கட்சிகளின் கூட்டணியை இயல்பான கூட்டணி என்பார்கள். அந்த வகையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான விவகாரங்களில் ஒத்துப்போகும். எனவே அதனை இயல்பான கூட்டணி என்று சொல்வார்கள். இதே போல் அதிமுக – மதிமுக கூட்டணியை எடுத்துக் கொண்டாலும் பெரும் சிக்கலும், கருத்து வேறுபாடும் இல்லாமல் நீண்ட நாட்கள் தொடர்ந்தது.

ஆனால் சில கூட்டணிகள் சர்க்கரைப் பொங்கல் வடகறி கூட்டணி போன்றது. உதாரணமாக 2011ல் அதிமுக – தேமுதிக அமைத்த கூட்டணி. இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்தன. ஆனால் விஜயகாந்த் – ஜெயலலிதா இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. இதே போன்ற ஒரு நிலையில் தான் தற்போது பாஜக – அதிமுக கூட்டணி நீடித்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக இரண்டு கட்சிகளும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் சரி, தொண்டர்களும் சரி இந்த கூட்டணியை விரும்பவில்லை என்பது தான் உண்மை.

தமிழகத்தில் அதிமுக அரசு பிரச்சனையின்றி சுமூகமாக நடைபெற வேண்டும் என்றால் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டியது அவசியம். இதற்காகவே சர்க்கரைப் பொங்கல் வடகறி போல் இருந்தாலும் பரவாயில்லை என்று பாஜகவுடன் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தது அதிமுக. ஆனால் இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் படு தோல்வி அடைந்தன. அதே சமயம் தங்கள் தயவால் தான் அதிமுக அரசு தமிழகத்தில் நீடிக்கிறது என்கிற எண்ணம் பாஜக தலைவர்களுக்கு எப்போதுமே உண்டு.

இதனால் தான் அதிமுக அமைச்சர்களையும் சரி, துணை முதலமைச்சரையும் சரி ஏன் முதலமைச்சரை கூட பாஜகவின் ஹெச்.ராஜா போன்றோர் மிக மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர். உதாரணத்திற்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆண்மகனா என்று ஆடிட்டர் குருமூர்த்தி சில மாதங்களுக்கு முன் பேசியிருந்தார். இதே போல் தற்போது விநாயகர் சதுர்த்திக்கு கர்நாடக அரசு அனுமதி கொடுத்துள்ளது, எனவே கர்நாடக அரசு ஆண்மையுள்ள அரசு என்று கூறியிருக்கிறார் ஹெச்.ராஜா. இதன் மூலம் தமிழக அரசு ஆண்மையற்ற அரசு என்று அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிமுக நிர்வாகிகள் கொதித்துப் போயுள்ளனர். அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் வெளிப்படையாகவே ஹெச்.ராஜாவுக்கு பதில் அளித்து வருகின்றனர். சாரணர் தேர்தலில் வெற்றி பெறுவது தான் ஆண்மை என்று ஹெச்.ராஜாவை அதிமுகவின் கோவை சத்யன் நேரடியாகவே விமர்சித்துள்ளார். இதே போல் தனியாக நின்று 999 வாக்குகளுக்கு மேல் வாங்க வேண்டும், ஒரு கருத்தை கூறிவிட்டு அட்மின் போட்டுவிட்டார் என்று ஒழிந்து கொள்வது ஆண்மை அல்ல என்று அதிமுகவின் ராஜ்சத்யன் ராஜாவிற்கு எதிராக கொதித்துள்ளார்.

இதற்கு பாஜக தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்படுகிறது. ஹெச்.ராஜாவுக்கு எதிராக பேசுவதாக நினைத்துக் கொண்டு பாஜகவிற்கு எதிராக பேசினால் தமிழகத்தில் அதிமுக அரசு நீடிக்காது என்றும், டெல்லி மேலிடம் நினைத்தால் தற்போதும் கூட அதிமுகவை இரண்டாக உடைத்து சின்னத்தை முடக்க முடியும் என்றும் பாஜகவின் ட்வீட் செய்து வருகிறார்கள். மேலும் 30 வருடங்களாக புடவைக்கு பின்னால் மறைந்திருந்த அதிமுக அமைச்சர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு தான் தலைநிமிர்ந்தார்கள் என்று பாஜக பிரமுகர்கள் போடும் ட்வீட்டால் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் கூட்டணி தொடர்பான விவகாரங்களை யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று அதிமுக மேலிடம் கடந்த வாரம் தான் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதனை மீறி அதிமுக நிர்வாகிகள் ராஜ் சத்யன், கோவை சத்யன் ஆகியோர் பாஜகவின் மேல்மட்ட தலைவர் ஒருவருக்கு எதிராக வெளிப்படையாக பேசியுள்ளனர். இதற்கெல்லாம் கட்சியின் மேலிடத்தின் அனுமதி இல்லாமல் அவர்கள் செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

இதே போல் ஹெச் ராஜாவும் கூட எடப்பாடி அரசை ஆண்மையற்ற அரசு என்று விமர்சித்திருப்பது அக்கட்சியின் மேலிட மனஓட்டத்தை பிரதிபலிக்கும் ஒரு விஷயம் என்கிறார்கள். எனவே கூட்டணியில் தொடர இரண்டு கட்சிகளுமே விரும்பாத நிலையில் அதனை முறிக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.