ராமேஸ்வரத்தில் கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக குழி தோண்டும்போது குவியல் குவியலாக ஆயுதங்கள் கிடைத்துள்ள நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தூத்துக்குடியில் நடந்தது நக்சல், சர்ச் கூட்டணியின் பரிமாணம். அது தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள "வந்தேறி மாடுகள்" உடனடியாக அடையாளம் காணப்படவேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தங்கச்சிமடம் அந்தோணியார்கோவில் கடற்கரை பகுதியை சேர்ந்தவர் மீனவர் எடிசன். இவருடைய வீட்டின் பின்புறம் கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக நேற்று பணியாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது 3 அடி ஆழத்தில் குழியில் ஒரு இரும்புப்பெட்டி தென்பட்டது. இதையடுத்து அது புதையலாக இருக்கலாம் என்று வீட்டின் உரிமையாளர் எடிசன் இது குறித்து தங்கச்சிமடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

போலீசார் மீண்டும் அந்த பகுதியில் ஆழமாக தோண்டி இரும்பு பெட்டியை மேலே கொண்டு வந்து பார்த்தனர். அதில் இலகு ரக எந்திர துப்பாக்கிக்கு பயன் படுத்தும் 19 தோட்டா பெட்டிகள் இருந்தன. தலா ஒரு பெட்டியில் 250 தோட்டாக்கள் இருந்தன.இதையடுத்து போலீசார் மீண்டும் தோண்டியபோது 5 கண்ணிவெடி பெட்டிகள், கையெறிகுண்டுகள் 15, ராக்கெட் லாஞ்சர் தோட்டா 2 பெட்டி உள்ளிட்டவை இருந்தன. மொத்தம் 50 பெட்டிகளில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. தோண்டத்தோண்ட வெடிகுண்டு, ஆயுதங்கள் கிடைத்த வண்ணம் உள்ளதால் போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து தோண்டி வருகின்றனர்.35 ஆண்டுகளுக்கு முன்பு இது புதைத்து வைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

முன்பு இலங்கையில் விடுதலைப் புலிகள் சண்டையின்போது இது புதைக்கப்பட்டு  இருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் இது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார்.

இராமேஸ்வரத்தில் அந்தோணியார்புரத்தில் எடிசன் என்பவர் வீட்டில் தோண்டத் தோண்ட நவீன ஆயுதங்கள். தூத்துக்குடியில் நடந்தது நக்சல், சர்ச் கூட்டணியின் பரிமாணம். அது தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள "வந்தேறி மாடுகள்" உடனடியாக அடையாளம் காணப்படவேண்டும். உளவுத்துறைக்கு சவால்”. இவ்வாறு அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள வீட்டில், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் இன்னும் தீவிர விசாரணையை தொடங்காத நிலையில், மத வன்முறையைத் தூண்டும் விதமாக, எச். ராஜா வெளியிட்ட இந்த  பததிவுக்கு  சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.