அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டதாக நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முடிவு குறித்து, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, திருக்குவளை - மன்னார்குடி குடும்பங்களில் இருந்து தமிழகம் விடுபடும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டம் நேற்று அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரனை நீக்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றினார்.

தினகரனின் எந்த அறிவிப்புகளும், கட்சியை கட்டுப்படுத்தாது என்றும் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். அது மட்டுமல்லாது, ஜெயலலிதாதான் நிரந்தர பொது செயலாளர் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு, தினகரன் அணி தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னர், டிடிவி தினகரன், தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி எப்போது தேர்தல் ஆணையராக மாறினார் என்றும், அவரை நீக்கும் அதிகாரம் தனக்கு உண்டு என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில், சசிகலா மற்றும் தினகரன் அதிமுகவில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டது, தமிழகம், திருக்குவளை மற்றும் மன்னார்குடி குடும்பங்களில் இருந்து விடுபடும் என்று பதிவிட்டுள்ளார்.