வீரமணி, கலிபூங்குன்றன் கூட்டம் நடத்தும் டிரஸ்ட்களின் பல்லாயிரக்கணக்கான கோடிகள் பணத்தை அரசு உடனே கையகப்படுத்தி மக்களுக்கு தர வேண்டும் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
எப்போதும் அதிரடியான சர்ச்சையான கருத்துகளைச் சொல்லக்கூடியவர் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா. குறிப்பாக திக, பெரியார் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் கருத்துகளை வெளியிடுவது ஹெச். ராஜாவின் வழக்கம். திக நடத்திவரும் டிரஸ்ட்களை கையகப்படுத்த வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் தனது கருத்தை ஹெச். ராஜா வெளியிபடுத்தியுள்ளார். இதற்கிடையே இந்த கொரோனா காலத்திலும் கொரோனா கொள்ளையாக மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிபோவதாகவும், ‘பிஎம் கேர்ஸ்’ குறித்தும் தன்னுடைய விமர்சனத்தை திக தலைவர் கி.வீரமணி அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் திகவை விமர்சித்தும் அதன் டிரஸ்ட் குறித்தும் ட்விட்டர் மூலம் அதிரடியான கருத்தைத் தெரிவித்திருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கும்பி கூழுக்கு அழும் போது ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி திகவிற்கு டிரஸ்ட் தேவையா. ஈ.வெ.ரா சிலைகள் இந்த பணத்தை கேட்கப் போகிறதா? எனவே வீரமணி, கலிபூங்குன்றன் கூட்டம் நடத்தும் டிரஸ்ட்களின் பல்லாயிரக்கணக்கான கோடிகள் பணத்தை அரசு உடனே கையகப்படுத்தி மக்களுக்கு தர வேண்டும்.” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.