ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் அடிவாங்க போவது தி.மு.க., தான்'' என பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்

மதுரையில் இதுகுறித்து கூறிய அவர், ''1996 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிராக ரஜினி தி.மு.க., கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார். அதிலிருந்து ரஜினி ரசிகர்கள் தி.மு.க.,விற்கு தான் ஓட்டளித்து வருகின்றனர்.  ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் அடிவாங்க போவது தி.மு.க., தான். எனவே  சட்டசபை தேர்தலை கருத்திற் கொண்டு இல்லாத பிரச்னை குறித்து தமிழகத்தில் தி.மு.க., குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறது. 

ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டது தற்போதைய தி.மு.க., தலைவர் ஸ்டாலின். ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டியது அ.தி.மு.க., திறந்து வைத்தது தி.மு.க., ஆனால் தற்போது இவற்றை எதிர்த்து தி.மு.க., போராடுவது ஏன்? விவசாய சட்டங்களில் ஏதாவது குறை இருந்தால் தெரிவிக்கலாம். அதை நிவர்த்தி செய்யலாம். ஆனால் இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை எனதெரிந்து குறை கூறுகின்றனர்.

ஒரு யுனிட்டுக்கு ஒரு காசு குறைக்க கோரி போராடிய விவசாயிகளை கொன்றது தி.மு.க. தற்போது விவசாயிகளுக்காக தி.மு.க., நீலிக்கண்ணீர் வடிக்கிறது. தி.மு.க., எம்.பி., ஆ.ராஜா அதிகம் பேசுகிறார். அவர் மீதான 2 ஜி ஸ்டெக்ரம் ஊழல் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். காங்கிரஸ்- தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை தான் பா.ஜ.க தற்போது விவசாய சட்டங்களாக கொண்டு வந்துள்ளது.

பிரதமர் மோடி எது கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக காங்கிரஸ்- தி.மு.க., எதிர்க்கின்றன. முன்னாள் மத்தியமைச்சர் மு.க.அழகிரி என் நண்பர். அவர் கட்சி துவங்காத நிலையில் கருத்து கூறுவது நட்புக்கு அழகல்ல’’ எனத் தெரிவித்தார்.