“நமக்கு எதிரான கொள்கை கொண்டவர்களாயினும் அதில் உறுதியாக இருந்தால் நாம் மதிக்கலாம். தங்கள் குழந்தைகளை மும்மொழிப் பள்ளிகளில் படிக்கச் செய்து கொண்டு நாங்கள் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம் என்பது ஏமாற்றுவேலை. இவர்கள் குழந்தைகள் பேரக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் விவரம் சேகரிப்போம்.” என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேற்று இரவு ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்துவிட்டு, தன் பிள்ளை, பேரப்பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளியில் படிக்க வைக்கும் தலைவர் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவேன் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ‘இந்து தமிழ்’  நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் கட்சிகளுக்கு எதிராக நானே முன்னின்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன் என்று எச்சரிக்கிறேன். எந்தெந்த கட்சிகள் மும்மொழிக் கொள்கைகளை எதிர்க்கின்றனவோ அந்தக் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கவுன்சிலர், வார்டு மெம்பர் வரைக்குமான பதவியில் இருப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்று பட்டியல் எடுப்பேன். சிபிஎஸ்இ பள்ளிகளில் படிப்பது உறுதியானால், அவர்களது வீட்டுக்கு முன்னால் அவர்களது கட்சித் தொண்டர்களையும் சேர்த்துக்கொண்டு போராட்டம் நடத்துவேன்.

இப்படிச் செய்தால் இவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும். ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்துகிற வேளச்சேரி சன் ஸைன் ஸ்கூலில் இந்தி நடத்துறீங்களே? ஒரு கொள்கையைப் பேசினால், அதை முதலில் நீங்கள் கடைப்பிடியுங்கள். ஊரை ஏமாற்றாதீர்கள்.” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.