தற்போது நடைபெறுவது கிறிஸ்தவர்களின் ஆட்சிதான் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருடைய வாயாலேயே சொல்லியுள்ளார். அதனால்தான் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழகத்தில் CSI ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திமுக அரசு ஆன்டி ஹிந்து கவர்ன்மெண்ட் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் 'நேரு-ஒரு மாயையின் மறுபக்கம்' என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா பங்கேற்று, புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஹெச்.ராஜா பேசுகையில், “காங்கிரஸ் கட்சிதான் நாடு பிளவுபட காரணமாகவே இருந்தது. ஜவஹர்லால் நேருவின் நிர்பந்ததால் எடுக்கபட்ட முடிவுகள் காரணமாகத்தான் நாட்டில் பிரிவினை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, காஷ்மீரின் பிரச்னைக்கு காரணமும் நேருதான். நேருவை பற்றி பள்ளியில் படித்த காலத்தில் பேசி பல பரிசுகள் வென்று உள்ளேன். 

எங்கள் மாமா நேரு, ரோஜாவின் ராஜா என்றெல்லாம் பேசியிருக்கிறேன். ஆனால், அதற்கு தற்போது பிராயசித்தமாகத்தான் நேருவை எதிர்த்துப் பேசுகிறேன். என்னுடைய ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், கையளவு இடம் இருந்தால்கூட, அதில் பிரதமராக வேண்டும் என்று யோசித்தவர் நேரு.” என்று ஹெச். ராஜா பேசினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது பற்றிய வதந்தி பரப்புகிறார்கள். இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக திருமாவளவன் பேசியது எல்லாமே பொய். அவருக்கு மதம் பிடித்துவிட்டது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியபோது, நாங்கள் என்ன எலிகளா எனக் கேட்டவர்தான் திருமாவளவன். ஆனால் தற்போது எல்லோரையும் தடுப்பு ஊசி செலுத்துங்கள் என்கிறார். அது வேற வாய் இது வேற வாய். தற்போது நடைபெறுவது கிறிஸ்தவர்களின் ஆட்சிதான் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருடைய வாயாலேயே சொல்லியுள்ளார். அதனால்தான் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். தமிழகத்தில் CSI ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திமுக அரசு ஆன்டி ஹிந்து கவர்ன்மெண்ட். 
தினமும் ஒரு கோயிலை இடிப்பது என ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். கோயில்கள் இடிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.