ஓபிஎஸ்சுடன் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

சசிகலா ஓபிஎஸ் இடையே நடைபெற்றுவந்த அதிகார சண்டை சசிகலா ஜெயிலுக்குச் சென்ற பிறகு, ஓபிஎஸ்.. எடப்பாடி பழனிசாமி இடையே தொடர்ந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பானமை ஆதரவு எம்எல்ஏக்கள் இருந்ததால் அவரை ஆளுநர் ஆட்சி அமைக்க அனுமதி அளித்தார்.

அதன் அடிப்படையில் நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றுக் கொண்டது. நாளை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இதில் அவர் வெற்றி பெறுவாரா என்பது நாளை தெரியவரும்…

அதேநேரத்தில் ஜெயலலிதா ஆட்சியை விரைவில் அமைப்போம் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் தங்களையே ஆதரிக்கின்றனர் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் சசிகலா தரப்பில் உள்ள எம்எல்ஏக்களும் தங்களையே ஆதரிக்கிறார்கள் என கொளுத்திப் போட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்யு ஏற்பட்டுள்ளது.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ம் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.