தமிழகத்தில் கடந்த 4 தினங்களில் நீட் தேர்வு அச்சத்தால் 3 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா திருப்புவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து பிரிவினைவாத சக்திகள் மாணவர்களை பயமுறுத்துகின்றனர். அதன் காரணமாக சில மாணவர்கள் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவு என்பதால்  நீட் தேர்விலும் மதிப்பெண் குறைவாக வரும் என்ற அச்சத்திலும் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்காக பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூற முடியுமா?
காதல் தோல்வியால்கூட பலரும் தற்கொலை செய்கிறார்கள். அதற்காக காதலிப்பது தவறு என்று சட்டம் இயற்றினார்களா? இந்த நீட் தேர்வு வழக்கே நளினி சிதம்பரத்தின் வாதத்தால்தான் முடிவடைந்தது. திமுக, தலைவர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும் என்றால், ப. சிதம்பரம் வீட்டு வாசலில்தான் நடத்த வேண்டும்.

 
முன்பு இந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் இந்தி எழுத்துகளை தார் பூசி அழித்தார்கள். ஆனால், கனிமொழியின் மகன் இந்தி பேசுகிறாரே அதை தடுப்பார்களா? தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து தொடர்ந்து பிரச்சனை செய்து வருகின்றன” என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.