பிரதமர் மோடியை வைகோ சந்தித்து பேசியதை, பெரியாரிஸ்டுகளுக்கும் இந்துத்துவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என்று விளக்கியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா.
பிரதமர் மோடி தமிழர்களை வஞ்சிப்பதாகக் கூறி, அவர் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் கறுப்புக் கொடி காட்டுவேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். அதன்படியே பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம், அங்கே சென்று கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினார் வைகோ. ஆகாய மார்க்கமாக வந்தபோது கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டார் வைகோ. மேலும் பாஜக அரசையும், மோடியையும் கடுமையாகத் தாக்கிப் பேசிவருகிறார் வைகோ.
இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு திமுக உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  எம்.பி. பதவியை ஏற்க அவர் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து வைகோ பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது  “பிரதமரை கடுமையாகத் தாக்கி பேசினாலும், அவர் இன்முகத்துடன் என்னை வரவேற்றார்.  நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவதாகக் குறிப்பிட்டார். அதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பல்வேறு விஷயங்கள் குறித்தும் மோடியுடன் பேசினேன். அதைப்பற்றி இப்போதைக்கு வெளியில் சொல்ல முடியாது” என்று தெரிவித்திருந்தார்.
வைகோ பிரதமர் மோடியைச் சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்திலும் உற்று நோக்கப்பட்டது. இந்நிலையில் வைகோவை  இன்முகத்துடன் பிரதமர் வரவேற்றது குறித்து, வைகோவின் பெயரை குறிப்பிடாமல் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு ட்விட் செய்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா. அதில், “தமிழகத்திற்கு பிரதமர் வந்த போது "Go back Modi" என்று கருப்பு பலூன் விட்டனர்.  அதே நபர்கள் பிரதமரை சந்திக்கும் போது இன்முகத்துடன் வரவேற்றுள்ளார் பிரதமர். இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.