தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்துக்கள் முன்பு தோலுரித்துக் காட்டப்பட்டு விட்டனர் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
‘கந்த சஷ்டி’ குறித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளியான வீடியோ, பாஜகவினரையும் இந்து அமைப்புகளையும் கொந்தளிக்க வைத்தது. இந்த சேனலை முடக்க வேண்டும் என்றும் கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்த சுரேந்திரன் என்பவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாஜகவும், இந்து அமைப்புகளும் கோரின. இதுதொடர்பாக சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கறுப்பர் கூட்டம் சேனல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சுரேந்திரன் புதுச்சேரி போலீஸில் சரண்டர் அடைந்தார்.


இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எதுவும் கண்டிக்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்திருந்தார். இதற்கிடையே கோவை சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டது. இந்த விவகாரம் தெரிய வந்தததும் திமுகவும் கூட்டணி கட்சிகளும் கடும் கண்டனம்  தெரிவித்தன. பாமகவும் கூட பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு கண்டனம்  தெரிவித்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கந்தன் கருணையே கருணை. 4 நாட்களில் 2 சம்பவங்கள். 4 நாட்களாக முதல் சம்பவத்திற்கு வாயே திறக்காத தலைவர்கள், இன்றைய சம்பவத்திற்கு கண்டனம். அனைவரும் இந்துக்கள் முன்பு தோலுரித்துக் காட்டப்பட்டு விட்டனர். வெற்றி வேல் வீர வேல்.” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.