தேர்தல் வைப்ரேஷன் கியர் - அப் ஆக துவங்கிவிட்டது என்பதை கட்சிகளின் ரியாக்‌ஷன்களே காட்டிக் கொடுக்க துவங்கிவிட்டன. கூட்டணி கால்குலேஷன்களுக்கு ஏற்ற வகையில் ஆளாளுக்கு பிற கட்சிகளை போட்டுத் தாக்குவதும், பதிலடி கொடுப்பதும், ஆதரவு நிலைப்பாடு எடுப்பதுமாக கதகதவென பரபரப்பு பற்றிக் கொண்டிருக்கிறது. 

பிற கட்சிகளையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யை, தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் முக்கிய முகங்கள் சில நாட்களாக போட்டுப் பொளக்கும் விவகாரம் தான் இன்றைக்கு நேஷனல் டாக்கே. குறிப்பாக தம்பிதுரை தட்டி எறிந்து தாக்கி எடுத்துக் கொண்டிருப்பதும், அதற்கு பி.ஜே.பி.யின் முக்கியஸ்தர்கள் பதில் தாக்குதல் கொடுக்க துவங்கியிருப்பதும் எங்கேயோ போய் நிறுத்துகின்றன அரசியல் சூழ்நிலையை. குறிப்பாக தமிழகத்தில் உயர்கல்வி துறையில் ஊழல் புரையோடிப் போய் நின்றதாகவும், அதை தமிழக கவர்னர் அடித்து நொறுக்கியிருப்பதாகவும் பி.ஜே.பி.யின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விளாசியிருப்பது பெரும் அனலை கிளப்பியிருக்கிறது அ.தி.மு.க.வினுள். 

முப்பது கோடி, நாற்பது கோடின்னு ஏலம் போயிட்டு இருந்துச்சு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள். பணம் கொடுத்து பதவிக்கு வந்தவங்க, பல்கலைக்கழகத்தின் துப்புரவு பணியாளர் நியமனம் வரைக்கும் காசு பார்க்க ஆரம்பிச்சாங்க. ‘போட்டதை திருப்பி எடுக்கணுமே!’ன்னு சொல்லி, பேராசிரியர்கள் நியமனமெல்லாம் தகுதி இல்லாத வகையில் நடந்துச்சு. திறமையில்லா பேராசிரியர்கள் பாடம் சொல்லிக்  கொடுக்க வந்ததால் உயர்கல்வி மாணவர்களுடைய தரம் சீர் கெட துவங்குச்சு. 

ஆனால் நம்ம கவர்னர் பன்வாரிலாலோ இதுக்கெலாம் செம்ம செக் வெச்சுட்டார். துணைவேந்தர் நியமனத்தில் பண விளையாட்டை தடுத்து நிறுத்தி, நியாயத்தை நிலைநாட்டியிருக்கார். இதனால் பல்கலைக்கழகங்களில் ஊழல் களைகள் எடுக்கப்பட்டிருக்குது. பல்கலை திருந்துச்சுன்னா, மாநிலமே திருந்துற மாதிரி. இந்த நியமனங்களை வெச்சு இவ்வளவு நாளா பணத்தில் மஞ்சள் குளிச்சிட்டு இருந்தவங்க இப்போ கையை பிசைஞ்சுட்டு இருக்கிறாங்க.” என்று வெளுத்தெடுத்துவிட்டார். இதற்கு அ.தி.மு.க.வின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கப் போகிறதோ!?