h raja nosecut by reporeters in chennai central

50 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட ராஜராஜசோழன் மற்றும் உலகமகாதேவி சிலைகள் மீட்கப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டபோது நிகழ்ந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, மைக் முன்பு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேச முயன்றபோது, பத்திரிக்கையாளர்கள் அனைவரும் மைக்குகளை எடுத்துக் கொண்டு கிளம்பியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவதோடு, பத்திரிக்கைகள் குறித்தும் அவதூறாக பேசி வருகிறார். இதனால் சில முன்னணி தொலைக்காட்சிகள் எச்.ராஜாவிடம் பேட்டி எடுப்பதில்லை என அறிவித்துள்ளன.

அண்மையில் கன்னியாகுமரியில் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேச வேண்டும் என அழைத்தபோது யாரும் போகாமல் அவருக்கு நோஸ்கட் கொடுத்தனர். இந்நிலையில்50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள், சமீபத்தில் மீட்கப்பட்டன.

இதையடுத்து ரயில் மூலம் அந்த சிலைகள் கொண்டுவரப்பட்டன. அப்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் சிலைகளுக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன், ஐஜி பொன் மாணிக்கவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ராஜா, மெதுவாக அமைச்சரையும், ஐஜியையும் பின்தள்ளிவிட்டு, மைக் முன்பாக வந்து பேட்டி கொடுப்பதற்கு ரெடியானார். தொடர்ந்து அவர் பேச முயன்றபோது, செய்திளாளர்கள், கேமராமேன்கள் ஆகியோர் மைக்குகளை எடுத்துக்கொண்டு விறுவிறு என்று அங்கிருந்து வெளியேறினர்.

இதனால் எச்.ராஜா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.