கந்த சஷ்டி குறித்து சர்ச்சையாக வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கந்த சஷ்டி கவசத்தைப் பாடி போராட்டம் நடத்த வேண்டும் என்று பாஜக  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
‘கந்த சஷ்டி’ குறித்து கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளியான வீடியோ, பாஜகவினரையும் இந்து அமைப்புகளையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த சேனலை முடக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிவருகின்றன. மேலும் கந்த சஷ்டி கவசம் பற்றி சர்ச்சையாகப் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிவருகிறார்கள். இதற்காக சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருப்பர் கூட்டத்தின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “கருப்பர் கூட்டம் என்கிற இந்து விரோத கூட்டம் கந்த சஷ்டி கவசத்தையும் முருகப்பெருமானையும் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டதை கண்டித்தும், அந்த அயோக்கியன்கள் கூட்டத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி 16.7.20 அன்று காலை 10 மணிக்கு இந்துக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் தர்ணா போராட்டம் நடத்திட பாஜக அழைக்கிறது.
இது தொடர்பாக ஏற்கனவே நான் ஆன்லைன் புகார் அளித்துள்ளேன். தமிழக பாஜக சார்பில் சென்னை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டும் அந்த கும்பலை தமிழக அரசு கைது செய்யாதது துரதிருஷ்டவசமானது. உண்மையில் அறுபடை வீட்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்து சமய அறநிலையத்துறை தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கோவில்களையும் காப்பாற்றாமல் இந்துக்களின் கௌரவத்தையும் காப்பாற்றாது ஒரு துறை எதற்கு என்கிற கேள்வி எழுகிறது.


எனவே முருகப்பெருமானை இழிவுபடுத்தும் கூட்டத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரை நம் போராட்டம் தொடரும். அதன் முதல் படியே முருகன் அவதரித்த கார்த்திகை நட்சத்திரம் அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஒவ்வொரு முருகபக்தரும் தன் வீட்டு வாசலில் முருகப்பெருமானின் திருவுருவப் படத்தின் முன்பு அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்து நம் போராட்டத்தை நடத்துவோம்.” என்று அதில் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.