தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவது தவறில்லை என்றும், அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான தடை விவகாரத்தில் பாஜக தலைவர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். இருப்பினும், இந்த விவகாரத்தில் ஏதாவது உருப்படியான காரியம் நடந்திருக்கிறதா என்றால் அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது. 

இந்நிலையில், அனுமதியின்றி நடத்தினால் குடியரசுத்தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி மிரட்டியுள்ளார். அதே கட்சியின் தேசிய செயலாளராக இருக்கும் எச். ராஜா, சுப்ரமணியசாமி  சொன்ன கருத்துக்கு நேர் எதிராக தடையை மீறுவோம் என்று கூறியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பங்கேற்றார்.

“தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினாலும் தவறே கிடையாது. ஏனென்றால், உதாரணத்திற்கு இப்போது அரசியல் கட்சி கூட்டத்திற்கு அனுமதி கிடையாது, 144 தடை உத்தரவு போட்டுள்ளோம் என்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அதை மீறுகிறோமா இல்லையா? ஆகவே நம்முடைய உரிமைகளில் அதனுடைய உரிமைப்பாட்டை காப்பாற்றுவதற்காக எந்த சட்டத்தையும் மீறுவதிலே தவறில்லை. அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும். அதற்குத்தயார்.” என்று கூறினார். யார் சொல்வதை கேட்பது?!!!!