"ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு 11 லட்சம் வழங்கியது ஓ.என்.ஜி.சி நிறுவனம்" - எச். ராஜா வைக்கும் ஆப்பு யாருக்கு?
கடந்த டிசம்பர் மாதம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 11 லட்சம் ரூபாய் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் வழங்கியுள்ளதாக பாரத ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து நெடுவாசல் மக்கள் போராட்ட களத்தில் குதித்தனர். கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இளைஞர்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யபட்டும் வருகின்றனர்.
இதனிடையே போராட்ட குழுவினர் முத்லமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினர்.
அதற்கு தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்காது. எனவே நெடுவாசல் மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் முறையான அறிவிப்பு வெளிவராமல் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என போராட்ட குழுவினர் அறிவித்து விட்டனர்.
இந்நிலையில், சிவங்கங்களியில் பாரத ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
நெடுவாசல் மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே திமுக உதவியுடன் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இத்திட்டத்திற்காக 11 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
இத்திட்டம் பெட்ரோல் தேவைக்காக மட்டுமே செயல்படுத்தபடுகிறது. இதனால் விவசாயம் குடிநீருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
இந்த திட்டம் குறித்து மத்திய அரசும் பெட்ரோல் நிறுவனமும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.
இந்த மக்கள் விரும்பாவிட்டால் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தாது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.