திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையிலிருந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீசியவரை அழைத்துவந்து பொன்னாடை போர்த்தியுள்ளார் ஹெச் ராஜா.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் கூறியதற்கு பாஜகவினரும், இந்து அமைப்புகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் எழுந்த சர்ச்சையால் கடந்த இரண்டு நாட்களாகப் பிரச்சாரத்திற்கு செல்லாமல் இருந்த கமல் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். திருப்பரங்குன்றம் வேட்பாளர் சக்திவேல் பழனிசாமியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கோட்சேவை தீவிரவாதி என்று கூறியது சரித்திர உண்மை என்று கூறியிருந்தார்.

பின்னர் வில்லாபுரத்தில்  பொதுக்கூட்ட மேடையில் பிரச்சாரம் மேற்கொண்டார். முதலில் மேடையில் இருந்த கமல், நிர்வாகிகள் பேசி முடித்த பிறகு, பேசுவதற்காக எழுந்து மைக் அருகில் வந்தார். அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் கமலை நோக்கி செருப்பை வீசியுள்ளார். பின்னர் அங்கிருந்த சில இளைஞர்கள் கமலுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர்.

பிரச்சார கூட்டத்துக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதும் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கமலை நோக்கி செருப்பு வீசியவரையும், கோஷமிட்டவர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த நபரை போலீசார் விடுவித்தனர்.

இந்நிலையில், கமலஹாசனை செருப்பால் அடித்த அந்த இளைஞரை பிஜேபி தேசிய செயலாளர் தனது வீட்டிற்க்கே வரவழைத்து, பொன்னாடை போத்தி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து டிவிட்டரில், கமலஹாசனை செருப்பால் அடித்த வீர சகோதரனுக்கு திரு ஹெச்.ராஜா அவர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டு. 👌👌 @HRajaBJP.. தர்ம போராளி திரு ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..என டிவிட்டரில் வாழ்த்தியிருக்கிறார்கள். 

இதைப்பார்த்த காயத்திரி ரகுராம், கமல் ஹாசன் செய்தது தவறுதான், அதற்கு என்னுடைய எதிர்ப்பும் உண்டு, அவரை சட்டப்படி தண்டிக்க வேண்டும். அனால், செருப்பு வீசிய நபரை பொன்னாடை போர்த்தி கவுரவிப்பது நல்ல விடயம் அல்ல என பதிவிட்டுள்ளார்.