திமுகவினர் நடத்திவரும் பள்ளிக்கூடங்களை சமச்சீர் கல்விக்கூடமாக மாற்ற வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் ஒரே மொழியாக இந்தியை எல்லோரும் ஏற்க வேண்டும். ஒரே மொழியின் கீழ் இணைவது இந்தியாவை கலாச்சார ரீதியாக வலிமைப்படுத்தும் என்று அண்மையில் நடந்த இந்தி தின நிகழ்ச்சியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அவருடைய இந்தப் பேச்சுக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இந்தி திணிப்பு கருத்தை எதிர்த்தன.


இந்நிலையில் அமித் ஷாவின் இந்தி திணிப்பு கருத்துக்கு எதிராக திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 20 அன்று நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது. இந்தப் போராட்டத்தை வைத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டரில் அவருடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், “ நேர்மை என்பது எள்ளுமுனை அளவாவது இருக்குமானால் போராட்டம் நடத்தும் முன்பு திமுகவினர் நடத்தும் இந்தி போதக பள்ளிகளை சமச்சீர் கல்விக்கூடமாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் உங்களின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்வர்.” என்று  தெரிவித்திருந்தார். 
ஏற்கனவே இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில்  தெரிவிக்கப்பட்டிருந்தபோது அதை திமுக கடுமையாக எதிர்த்தது. அப்போது திமுகவினர் நடத்தும் பள்ளிகளின் முகவரியை வெளியிட்டு, இந்தப் பள்ளிக்கூடங்களில் இந்தி கற்பிக்கப்படுவதாக ஹெச். ராஜா தெரிவித்திருந்தார். இந்தப் பள்ளிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அப்போது அவர் தெரிவித்திருந்தார்.