பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தவறான கலாச்சாரத்தை உருவாக்குகிறார் என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோவை ஒருமையில் பேசியிருக்கக் கூடாது என்றும் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படாமல், சமஸ்கிருத பாடலான மகா கணபதி பாடல் பாடப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிக்கப்பட்டதாக பல்வேறு கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்து பேட்டி கொடுத்திருந்தனர். அந்த வகையில் மதிமுக பொது செயலாளர் வைகோவும், கடுமையாக எதிர்த்து பேட்டி கொடுத்திருந்தார்.

வைகோவின் இந்த பேச்சுக்கு எதிராக, பாஜகவின் தேசிய தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசி இருந்தார். அப்போது, மதிமுக பொது செயலாளர் வைகோவை, ஒருமையில் பேசியுள்ளார்.

இந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் இன்று சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசு, சமஸ்கிருதம், இந்தியை திணிக்க முயல்வதாக கூறினார். மதச்சார்புடன்தான் பாஜக நடந்து கொள்வதாக கூறினார். சென்னை ஐஐடியில் நடந்த விழாவில், தாழ்த்தாய் வாழ்த்துப்பாடலை டேப்பிலும் ஒலிபரப்பி இருக்கலாம். தமிழகத்தை அழிக்க நினைக்கும் முயற்சி நடக்கிறதோ என்று எண்ணதோன்றுகிறது. 

தமிழை ஒழிக்கப்பார்க்கிறாங்க... சிறுபான்மையினரை சீண்டும் வகையில் பாஜகவின் நடவடிக்கை உள்ளது. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சரம் இல்லை. ஆனால் அதனை பாஜக தூண்டுகிறது என்றார்.

மதிதுக பொது செயலாளர் வைகோ குறித்து ஹெச்.ராஜா அவன் இவன் என்று பேசியது தவறு. வைகோ கூறியதற்கு மறுப்பு தெரிவித்திருக்கலாம். ஒருமையில் பேசியிருக்கக் கூடாது.