தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம் என்று பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.

 சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தேர்தல் ஆயத்தப் பணி துவக்க விழாவில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ‘70 ஆண்டுகளாக விவசாயிகளை கூன் போட்டு நிற்க வைத்தது காங்கிரஸ் ஆட்சிதான். மத்திய அரசுடன் இணைந்து செயல்படாவிட்டால் இன்னும் 3 மாதத்தில் மேற்குவங்க அரசு அறுத்தெரியபடும்.

புதிய வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன் வராது. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஹெச்.ராஜாவை சட்டமன்ற உறுப்பினராக்கி தமிழக அமைச்சராக்க உள்ளோம். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பாஜக கைகாட்டும் நபரை சட்டமன்ற உறுப்பினராக்குங்கள். பாஜகவின் மாநில தலைவர் முருகன் முதல்வர் வேட்பாளர் குறித்து கூறிய கருத்து திரித்து கூறப்படுகிறது. அவர் தமிழக முதலமைச்சர் குறித்து தேசிய தலைமை மூத்த தலைவர்கள் அறிவிப்பார்கள் என்று கூறி வருகிறார்,' என்றார்.

 

அண்ணாமலையின் இந்தப்பேச்சு மூலம் பாஜக- அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கும் என்று தோன்றுகிறது. மேலும் முதல்வர் வேட்பாளரை தாங்கள்தான் தேர்ந்தெடுப்போம் என்று கூறி வந்த நிலையில் அமைச்சரவையிலும் பாஜக பங்கு கேட்க இருப்பது தெளிவாகிறது.