இந்தி பாடங்களை கற்றுத் தரும் திமுகவினர் நடத்தும் பள்ளிக்கூடங்களுக்கு முன்பாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. 
புதிய தேசிய கல்வி கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்திய எல்லா பள்ளிக்கூடங்களிலும் கட்டாயம் கற்று தர வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டதற்கு  திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழகத்தில் உள்ள பிற அரசியல் கட்சிகளும் இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. திமுகவின் எதிர்ப்பையடுத்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திமுகவினர் நடத்தும் 45 பள்ளிக்கூடங்களின் பெயர்கள், முகவரியை வெளியிட்டு இந்தப் பள்ளிக்கூடங்களில் இந்தி கற்பிக்கப்படுவதாக ஆதாரத்துடன் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, இந்த விவகாரம் பற்றி மீண்டும் பேசினார். “இந்தி திணிப்பு தமிழகத்தில் மீண்டும் கொண்டுவரப்படுகிறது என சில கட்சிகள் கூறிவருகின்றன. அந்தக் கட்சிகள் ருசி கண்ட பூனைகள். ரத்த சுவையைப் பார்த்த புலி சும்மா இருக்காது. ஏற்கனவே பொய்யைச் சொல்லி வெற்றி பெற்றுவிட்டோம் என்ற காரணத்தால் மீண்டும் பொய்யைச்  சொல்ல திமுக இந்தித் திணிப்பு என்ற புருடாவை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கற்றுக்கொடுத்துக் கொண்டு யாரை ஏமாற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்? இனியும் இந்தி திணிப்பு என திமுக பேசினால், அக்கட்சியினர் நடத்தும் 45 பள்ளிக்கூடங்களுக்கு முன்னாலும் பாஜக தொண்டர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.