தமிழக அரசியல் கட்சிகள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

காவிரி இறுதி தீர்ப்பில், தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கை 192லிருந்து 177.25 டிஎம்சியாக குறைத்த உச்சநீதிமன்றம், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கு முன் பலமுறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதையடுத்து இதுதொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கப்பட்டது. 

அப்போது, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டதையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்ற தமிழக அரசியல் கட்சிகளின் தொடர் கோரிக்கையையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, தமிழக அரசு சார்பில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தால் எந்தப் பயனும் ஏற்பட போவது கிடையாது. இவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே போதும். நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும். காவிரி பிரச்னை இந்த அளவுக்கு  விஸ்வருபம் எடுத்ததற்கு திமுகதான் காரணம் என எச்.ராஜா கடுமையாக விமர்சித்தார்.