ஸ்டெர்லைட் அரக்கனுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் களத்தில் குதித்திருப்பது தூத்துக்குடி மக்களை உறசாகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி–மதுரை பைபாஸ் சாலையில்  ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம  மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற பிரமாண்ட கண்டன போராட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மக்களுடன் நான் உள்ளேன். ஆலை தொடர்பான மக்கள் போராட்டத்துக்கு என்னை அழைத்தால் வருவேன். ஊடகங்களும், தமிழ் மக்களும் ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. ஊடகங்கள் இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

தன்னெழுச்சியாக தூத்துக்குடி பகுதியில் எழுச்சி பெற்று வரும் இந்த போராட்டத்துக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு  தேவையில்லை என போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இளைஞர்கள் முடிவு செய்திருந்தாலும் கமல்ஹாசனின் ஆதரவு அவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

ஆனால், ரஜினிகாந்த் இதுவரை இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து மக்கள் பிரச்சனைக்காக தனது ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

தற்போது தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து  அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நடந்து முடிந்த பிறகு எதையும் தடுக்க முடியாது என்பதை உணர மறுத்தால் விபரீத விளைவுகளுக்கு யார் பொறுப்பு..? மக்களே அரசு மக்களுக்காகவே அரசு என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில்  குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.