ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் தங்களுக்கு கிடைத்த சறுக்கலை அடுத்து, தமிழகத்தில் பி.ஜே.பி. தாறுமாறாக வறுபடுவதை துல்லியமாக கண்காணிக்கிறது அக்கட்சி. அதிலும் குறிப்பாக அ.தி.மு.க.வின் அமைச்சரவை முக்கியஸ்தர்கள் தங்கள் மேல் பாய்வதை கண்டு கொதித்தேவிட்டார் அமித்ஷா. 

இந்த கடுப்பை மோடியின் கவனத்துக்கு அவர் கொண்டு செல்ல, அடுத்த சில மணி நேரங்களிலேயே பாய துவங்கிவிட்டது சி.பி.ஐ. குட்கா ஊழல் விவகாரத்தில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரையும், மாஜி அமைச்சர் ரமணாவையும் ஆஜராக சொல்லும்படி சமீபத்தில் சம்மன் அனுப்பியிருந்தது சி.பி.ஐ. ‘சரி விசாரிப்பார்கள், அனுப்பிவிடுவார்கள்.’ என்ற எண்ணத்தில்தான் கேம்பஸினுள் நுழைந்தார் விஜயபாஸ்கர். அதுவும் பத்திரிக்கை மற்றும் மீடியாவுக்கு தெரியாமலே உள்ளே வந்தார்.  

சிட்டிங் மற்றும் மாஜி அமைச்சர்களிடம் கேட்பதற்காக மொத்தம் இருநூறு கேள்விகளை தயாரித்து வைத்திருந்திருக்கிறது சி.பி.ஐ. ஏதோ ஒன்றிரண்டு மணி நேரங்களில் விசாரணையை முடிப்பார்கள் என்று நினைத்த டாக்டருக்கும், இந்த அனுமார் வால் கொஸ்டீன் பேப்பர் தலைசுற்றலை கொண்டுவந்துவிட்டது.  

ஒன்று இல்லை, ரெண்டு இல்லை...கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் வெச்சு செய்துவிட்டது சி.பி.ஐ. தனக்கும் இந்த முறைகேடுகளுக்கும் சம்பந்தமில்லை, தான் எங்கேயும் பணம் வாங்கவில்லை, அதை நிரூபிக்க முடியுமா? என்று லேசாக கெத்து காட்டிப் பார்த்த விஜயபாஸ்கரிடம், ‘உங்களுக்காக உங்க நண்பர் சரவணன் பணம் வாங்கியதாக வாக்குமூலம் வந்திருக்கிறதே!’ என்று ஒரு கொக்கியை போட்டு, அதற்கான சில ஆதாரங்களையும் எடுத்து அடுக்கியிருக்கிறார்கள். 

அந்த ஏஸியிலும் வியர்த்துவிட்டது விஜயபாஸ்கருக்கு. விஜயபாஸ்கருக்கு கொடுக்கப்பட்ட ட்ரீட்மெண்டின் மூலம் மற்ற அமைச்சர்கள் அலர்ட் ஆகி, தங்களை உரசுவதை உடனே நிறுத்துவார்கள்! என்று நம்புகிறது பி.ஜே.பி.தலைமை உரசல் தொடர்ந்தால் இருக்கவே இருக்கிறது வ.வ.து.!