குருபரப்பள்ளி அருகே கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி பண்டிகங்காதர் உத்தரவின்படி, குருபரப்பள்ளி போலீஸ் எஸ்எஸ்ஐ பாண்டியன் மற்றும் போலீசார் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே உள்ள பந்தாரப்பள்ளி மேம்பாலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அவ்வழியே வந்த ஒரு பிக்அப் வேன் டிரைவர், போலீசாரை பார்த்த உடன், சற்று தொலைவில் வாகனத்தை நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கி தப்பியோடியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வேனை சோதனை செய்தனர். அதில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் 65 அட்டை பெட்டிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து குட்கா பொருட்களுடன் 6 லட்ச ரூபாய் மதிப்பிலான வேன் என மொத்தம் 10 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது, இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்கு பதிவு செய்து, அந்த வேன் யாருக்கு சொந்தமானது? குட்கா பொருட்கள் எங்கு கடத்தி செல்ல இருந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.