மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

2017ல் சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டுவந்த விவகாரத்தில் உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் இன்று (செப்டம்பர் 23) விசாரணைக்கு வந்தது.

திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை இடமாற்றம், பதுக்கல், விற்பனை தொடர்பாகத்தான் தடை இருந்தது. வெளியில் கிடைப்பதை அரசு கவனத்திற்கு கொண்டு வரவே பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்தனர். 2017ல் அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறு இருப்பதாக கூறி அதை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. குட்கா வைத்திருந்தால் அது குற்றமா இல்லையா என்பது நீதிமன்றத்தில் முடிவெடுக்க வேண்டிய விவகாரம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே விவகாரத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர” என்று வாதிட்டார். 

திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, போதைப்பொருள் வணிகத்திற்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர பேச்சு சுதந்திரத்திற்கு தடை விதிக்கவில்லை. அதன் அடிப்படையில்தான் குட்கா கிடைப்பது குறித்த பிரச்சினை பேரவையில் எழுப்பப்பட்டது. ஆனால், உள்நோக்குடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். பின்னர், அரசு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புஷ்பா சத்யநாராயணா தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று தெரிிவித்திருந்தனர். இந்நிலையில், குட்கா விவகாரத்தில் 2வது முறை அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.