உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த காடுவெட்டி குரு அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த மே மாதம் காலமானார். அவர் மறைவு முதலே அவரது குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் வர ஆரம்பித்தன. காடுவெட்டி குருவின் மனைவி லதா திடீரென மாயமானார். அவரை அவரது உறவினர்கள் கடத்தி வைத்திருப்பதாக மகன் கனலரசன் பரபரப்பு வீடியோ வெளியிட்டார்.

இதன் பிறகு காடுவெட்டி குருவின் தாய் மற்றும் மனைவி இடையே ஏற்பட்டுள்ள சொத்து பிரச்சனை தான் அனைத்திற்கும் காரணம் என்று தகவல்வெளியாகின. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குருவின் மனைவி லதாவும், குருவின் மகன் கனலரசனும் வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தனர். ஆனால் ராமதாஸ் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிடுவதை தவிர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தான் காடுவெட்டி குருவின் மகள் 20 வயதே ஆன விருதாம்பிகை தனது அத்தை சந்திரகலாவின் மகன் மனோஜ் கிரணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதோடு மட்டும் அல்லாமல் காதல் திருமணம் செய்து கொண்ட தனக்கும் தனது கணவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும் கும்பகோணம் காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் குருவின் மகள் விருதாம்பிகை அவரது காதல் கணவர் மனோஜ் கிரணுக்கு குருவின் மற்றொரு தங்கை மீனாட்சி அடைக்கலம் கொடுத்து கும்பகோணத்தில் உள்ள தனது வீட்டில் வைத்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். காடுவெட்டி குரு மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக மீனாட்சி தெரிவித்தார்.

ஆனால் பா.ம.க நிறுவனர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் தலையிட்டு குருவுக்கான சிகிச்சையை தடுத்து நிறுத்தி அவர் சாவுக்கு காரணமாகிவிட்டதாகவும் மீனாட்சி கூறினார். குரு மறைந்த சுமார் ஆறு மாதங்கள் வரை ஆக உள்ள நிலையில் திடீரென அவரது சகோதரி மீனாட்சி கூறியுள்ள குற்றச்சாட்டு பா.ம.கவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.