திமுகவினரை பார்த்து மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது. ஆட்சியில் இல்லாதபோதே இப்படி அரங்கேறுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திமுகவினர் நில அபகரிப்பில் ஈடுப்பட்டதால் பலபேருடைய நிலங்கள் வீடுகள் அபகரிக்கப்பட்டது.இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அதிமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவினரால் அபகரிக்கப்பட்ட நிலங்கள் வீடுகள் திரும்ப பாதிக்கப்பட்டவர்களிடமே ஒப்படைப்பதற்காக நிலஅபகரிப்பு துறை ஒன்று அமைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆட்சிக்கும் வந்தார். நிலஅபகரிப்பு பிரிவு ஒன்றை தொடங்கினார்.அதன்படி திமுகவினாரால்  அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் திரும்ப பாதிக்கப்பட்டவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன். இவர் தந்தை லட்சுமிபதி. இவர், திருப்போரூர் அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், எம்எல்ஏ குடும்பத்துக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது.இந்நிலையில், குமார், தனக்கு சொந்தமான நிலத்துக்கு சென்றார். அப்போது, எம்எல்ஏ இதயவர்மன் தந்தை லட்சுமிபதி 10க்கும் அதிகமானோருடன் அங்கு வந்தார், அப்போது, குமார் மற்றும் எம்எல்ஏ தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், குமார் அங்கிருந்து தனது காரில் ஏறி தப்பிக்க முயற்சி செய்தார். அப்போது, லட்சுமிபதி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் குமாரின் காரின் மீது சரமாரியாக சுட்டார்.

இதில், அந்த வழியாக சென்ற பூ வியாபாரி சீனிவாசன் என்பவர் மீது குண்டு பட்டு, படுகாயமடைந்தார். இதையடுத்து குமாரும், சீனிவாசனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக திமுக எம்எல்ஏ இதயவர்மன்,  அவர் ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தாம்பரம் அடுத்த மேடவாக்கம் பகுதியில் உறவினர் வீட்டில் எம்எல்ஏ இதயவர்மன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று மாலை அங்கு சென்று எம்எல்ஏ இதயவர்மனை கைது செய்தனர். அவரை செங்கல்பட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக எம்எல்ஏவின் தம்பி நிர்மல், மைத்துனர் வசந்த், கார் டிரைவர் கந்தன், செங்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ், வாசுதேவன், யுவராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது.."திமுக ஆட்சிக் காலத்தில் நில அபகரிப்பு அதிகமாக இருந்தது. தற்போது துப்பாக்கி கலாசாரமும் திமுகவில் தலைதூக்கியுள்ளது. திமுகவினரை பார்த்து மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது. ஆட்சியில் இல்லாதபோதே இப்படி அரங்கேறுகிறது.துப்பாக்கி சூடு நடத்திய திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.