குஜராத் மாநிலத்தின் பிரபல காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சங்கர் சிங் வகேலா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

தனது 77-வது பிறந்தநாளை ஒட்டி நடந்த விழாவில் அவர் இதை அறிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது-

நான் குஜராத் மாநில எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுகிறேன்.

நான் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஆகஸ்டில் நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு ராஜினாமா செய்வேன்.

நான் கடந்த 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டேன். இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

ஆனால் தனது எதிர்கால திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்கவேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வகேலா விலகியிருப்பது துணை ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகேலா தனது எதிர்காலத்திட்டம் என்ன என்பது பற்றி குறிப்பிடவில்லை. எனினும், அவர் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு எதிராக புதிய முன்னணியை உருவாக்குவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கட்சி நிலைபாடு மாறி வாக்களித்தனர். இதனால் குஜராத்தில் 57 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சியில் இருந்து ,எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் மீரா குமாருக்கு 49 வாக்குகள் மட்டுமே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள குஜராத் மாநிலத்தில் பிரபல தலைவர் வகேலா விலகியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.