நடிகர் சூர்யாவின் கருத்துக்கள் நியாயமானது, அறமானது, எனவே என்றென்றும் அவருடன் கேம்பஸ் ஃப்ரண்ட் துணை நிற்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பி வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-  

நீட் தேர்வின் அச்சத்தின் காரணமாக கடந்த ஒரே நாளில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் தேர்வினால் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனவும், கொரோனா காரணமாக நீட் தேர்வை இந்த முறையாவது ரத்து செய்ய வேண்டும் எனவும் இந்தியா முழுவதும் கண்டன குரல்கள் ஒழித்து வந்தது. ஆனால், மத்திய, மாநில அரசுகளோ நடத்தியே தீருவோம் என அடம்பிடித்து நீட் தேர்வை நடத்தினார்கள். மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தாலே இத்தனை மாணவர்களின் உயிர்கள் பறிபோய் உள்ளன. இந்த தற்கொலைகள் மத்திய மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய கொலைகள் எனவும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், மாணவர் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் அறிக்கையில் "நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கின்றன. கொரோனாவினால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதி மன்றம் மாணவர்களை அச்சமின்றி நீட் தேர்வு எழுத சொல்கின்றது. சாதாரண பிள்ளைகளின் மருத்துவ கனவில் தீ வைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்." என தனது கண்டனத்தை பதிவு செய்தார். 

அவர் மேலும் பல குற்றச்சாட்டுகளை அந்த அறிக்கையில் பதிவு செய்திருந்தார். நடிகர் சூர்யாவின் இந்த கண்டன அறிக்கை வெளியான சில நிமிடங்களில் தமிழகம் முழுவதும் வரவேற்ப்பை பெற்றது. ஆனால், வழக்கம்போல் பா.ஜ.க.வினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சூர்யாவின் அறிக்கையில் நீதிமன்றத்தை அவமதித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது தமிழகம் முழுவதும் எதிர்ப்பைப் பெற்றது. ஆனால், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒன்று சேர்ந்து சூர்யாவின் அறிக்கையில் நியாயம் இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் கடிதம் எழுதியது தமிழகத்தின் தனித் தன்மையை காட்டுகிறது. 

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவிற்கு தமிழகத்தில் ஆதரவு குரல்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. உங்களுடைய கருத்துக்கள் ஃபாசிச சக்திகளின் விமர்சனங்களை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பல பிரபலங்கள் அமைதியாக இருக்கும் நிலையில், தொடர்ந்து சமூகம் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த விஷயங்களில் நடிகர் சூர்யாவின் கருத்துக்களையும், அறிக்கைகளையும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. உங்களுடைய அறம் சார்ந்த இந்த நியாயமான கருத்துக்களுடன் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்றென்றும் துணை நிற்கும். தொடர்ந்து இதுபோன்ற மாணவ உரிமை சார்ந்த பிரச்சனைகளில் தலையிட்டு குரல் கொடுக்க வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.