8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கடந்த வாரம் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று இந்து மல்கோத்ரா அமர்வில் விசாரணைக்கு வந்த போது சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது.

 

விரிவான விசாரணை அவசியம்

8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கை விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதில் அதிக தவறுகள் இருப்பதை பார்க்க முடிகிறது. திட்ட அறிவிப்பை வெளியிடும் முன்பே நிறைய பேரிடம் நிலம் வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளன. திட்டத்திற்கான அனுமதி கிடைக்கப் பெறுவதற்கு முன்பே நிலத்தை எடுத்து தரவுகளை எப்படி சேர்த்தீர்கள் என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயமாக நாங்கள் கருதவில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.