ஸ்டாலினைப் பார்த்தால் ஒரு வகையில் மிக பாவமாய்தான் இருக்கிறது. மனிதர் அவ்வளவு கஷ்டப்பட்டு தன் கட்சியை ஆளுங்கட்சியாக மாற்றிடவும், தான் முதல்வராகிடவும் தன்னந்தனியாக போராடுகிறார். ஆனால் அவரது கட்சியின் நிர்வாகிகள் பலரோ, பிரச்னைக்குரிய வேலைகளை செய்து சர்ச்சையில் சிக்கி, ஒட்டுமொத்த கட்சி மானத்தையும் துகிலுரிந்து விடுகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகி ஒருவர் ’இல்லீகல் பாஸ்போர்ட் பிஸ்னஸ் நடத்தினார்’ எனும் விவகாரத்தில் சிக்கி, கியூ பிராஞ்ச் போலீஸால் கைது செய்யப்பட்டுவிட, இப்போது செம்ம ஷாக் ஆகியிருக்கிறார் ஸ்டாலின். 


திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. வர்த்தகர் அணி அமைப்பாளார் ராஜ் மோகன்குமார். இவர், போலி ஆவணங்களை உருவாக்கி, அதன் இல்லீகலான வழியில் பாஸ்போர்ட் பெறுவதும், அதை பயன்படுத்தி சில நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதும், இதற்கு கட்டணமாக பல லட்சங்களை பெற்றுக் கொள்வதுமாக  இருந்தாராம். இந்த தகவல் கியூ பிராஞ்ச் போலீஸுக்கு தெரியவர, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் தன் தோழியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதாகையிலும் கூட பிரேம்குமார் எனும் நபரை போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கனடாவில் நிரந்தரமாக தங்க வைக்கிறேன் என்று உறுதி கொடுத்து தன்னுடன் அழைத்து செல்வதற்காக நின்ற போதுதான் சிக்கியிருக்கிறாராம். இவரிடம் மட்டும் சுமார் இருபத்து எட்டு லட்ச ரூபாயை இதற்கு கட்டணமாக ராஜ் மோகன்குமார் பெற்றுள்ளார் என்று கியூ பிராஞ்ச் போலீஸின் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. 

ராஜ் மோகன்குமார் அடிக்கடி இலங்கைக்கு பறப்பதும், அங்கே அதிக நண்பர்களை வைத்திருப்பதும், அங்குள்ளவர்களை அடிக்கடி சந்திப்பதுமாகவும் இருந்திருக்கிறார். இதையும் தோண்டத் துவங்கியுள்ளது கியூ போலீஸ். இலங்கையோடு அப்படி என்ன ராஜ் மோகன்குமாருக்கு உறவு? இதுவரையில் இல்லீகல் ரூட்டில் இவர் பெற்றுக் கொடுத்த பாஸ்போர்ட்களின் மூலம் மோசடியாக வெளிநாட்டுக்குள் நுழைந்தவர்களில் அதிகம் பேர் இலங்கைக்காரர்களே! அப்படி என்ன இலங்கை செல்வாக்கு? என்றெல்லாம் தோண்டத் துவங்கியுள்ளது. 

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், ராஜ் மோகன்குமாரின் ‘சேவை’யை மிக அதிகமாக அவரது கட்சி நிர்வாகிகள் பலர் பயன்படுத்தியுள்ளனர். தி.மு.க. வி.ஐ.பி.க்களின் வாரிசுகளும் இவரோடு அதிகம் ‘லிங்க்’ வைத்திருந்திருக்கின்றனர். 
இதையும் தோண்டிவிட்ட கியூ போலீஸுக்கு ‘தி.மு.க. வி.ஐ.பி. வாரிசுகள் சிலர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்திருக்கின்றனர். அப்பயணங்களை ஒருங்கிணைத்து கொடுத்தது இந்த மோகன்குமார்தான். ஏன் அவர்கள் அப்படி வெளிநாடுக்கு சென்றனர்?  யாரோடு சென்றனர்? அங்கு என்ன நடந்தது?’ என்பதையும டே பை டே விவரமாக எடுத்து வருகின்றனர். 
அநேகமாக ராஜ் மோகன்குமாரின் கைதானது தி.மு.க.வில் பெரும் அதிர்ச்சியலைகளை உருவாக்கும்! என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து. இது ஸ்டாலின் மனதை பெரிதாய் பாதித்திருக்கிறதாம்.